

கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி ரூ.30 லட் சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துணைவேந்தர் ஒருவர் கைதாகி இருப்பது உயர் கல்வித்துறை வரலாற்றில் இதுமுதல் முறையாகும்.
உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.40 லட்சம் பேரம் பேசி இறுதியாக ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்யவே சுரேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனபவுடர் தடவிய ரூ.1 லட்சம் மற்றும் ரூ.29 லட்சத்துக்கான காசோலையை கொடுத்து அனுப்பி அவரை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
துணைவேந்தருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்ம ராஜையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தரின் வீடு மற்றும் அவரது அலுவலகம், பேராசிரியர் தர்மராஜின் அலுவலகம், வேலாண்டிபாளையத்தில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை நடந்தது. பின்னர் துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்ம ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரி சோதனைக்கு அழைத்து சென்றனர்.
அதன்பிறகு ரேஸ்கோர் சில் உள்ள லஞ்ச வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மினோ வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் நள்ளிரவு 1.30 மணிக்கு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்ட னர்.
கைதான துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7, 13(1) (டி) மற்றும் 12 ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவர் மீதும் துறை ரீதியாக சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2016-ம் ஆண்டு மார்ச் மாதம் துணைவேந்தராக கணபதி பதவி ஏற்றார். சில மாதங்களிலேயே அவர் பல்கலைக்கழகத்தின் 28 துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக இருந்த பேராசிரியர் பணி இடங்கள் என மொத்தம் 82 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நியமனத்தில் பல்கலைக்கழக விதிமுறைகள் மீறப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து உயர் கல்வித்துறை செயலாளரிடம் இருந்து பணியிடங்கள் நிரப்பு வதை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
அதையும் மீறி துணை வேந்தர் கணபதி சிண்டி கேட் கூட்டத்தை கூட்டி பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பணியிடங்கள் அனைத்துக்கும் ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளதாக வும், இதன்மூலம் ரூ.30 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்தன.
இந்த புகார்கள் தொடர்பாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 மாதமாக லஞ்ச ஒழிப்பு போலீசார், துணைவேந்தர் கணபதியின் செயல்பாடுகள் குறித்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பல்கலைக்கழக பேராசிரியர் தர்மராஜ் மற்றும் தொலைதூர கல்வி இயக்குனர் (பொறுப்பு) மதிவாணன் ஆகியோர் துணை வேந்தர் கணபதிக்கு பணம் வாங்கி கொடுக்கும் தரகராக செயல்பட்டதை கண்டுபிடித்தனர். ஆனால் இதுதொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.
இந்தநிலையில் பேராசிரியர் சுரேஷ் தன்னிடம் துணைவேந்தர் கணபதி ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் துணைவேந்தரை கையும், களவுமாக பொறி வைத்து மடக்கி பிடித்தனர்.
கணபதியின் மனைவி சொர்ண லதா லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்துள்ளார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.
மேலும் தொலை தூர கல்வி இயக்குனர் (பொறுப்பு) மதிவாணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். 2016-ம் ஆண்டில் மொத்தம் 80 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள விதிமீறல்கள் என்னென்ன? யார்-யாரிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினார்? என விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனடிப்படையில் மேலும் சிலர் சிக்கவும் வாய்ப்பு உள்ளது.