கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கோவை அருகே  தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
Published on

கவுண்டம்பாளையம்:

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி சிந்து. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணேசன் நேற்று வேலைக்கு சென்றிருந்தார். மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். சிந்து வீர பாண்டியில் வசிக்கும் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

மாலையில் சிந்து வீடு திரும்பிய போது முன்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் பீரோவை உடைத்து தங்க வளையல், செயின், மோதிரம் என மொத்தம் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மியாடிட் மனோ மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

வீட்டில் ஆள் இல்லாததை கண்காணித்து பட்டப்பகலில் கதவை உடைத்து மர்மநபர்கள் துணிச்சலாக கைவரிசை காட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர்கள் யார்-யார்? என பட்டியல் சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அங்கிருந்து 4 கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம், பழைய கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கடந்த 1 மாதத்தில் நடைபெறும் 3-வது திருட்டு சம்பவம் இது ஆகும்.

தொடர் திருட்டில் ஈடுபடுபவர்களை விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com