கோவை பஸ்சில் உடலில் மறைத்து கடத்திய ரூ.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கோவை பஸ்சில் உடலில் மறைத்து கடத்திய ரூ.50 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்.
Published on

கொழிஞ்சாம்பாறை:

கோவையில் இருந்து கேரளாவுக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டது. பஸ் பாலக்காடு மாவட்டம் வாளையார் அட்டப்பள்ளம் சென்றது.

அப்போது பாலக்காடு இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையில் வருமானவரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் இருந்து வந்த பஸ்சையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

பஸ்சில் சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் அமர்ந்திருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது உடல் மற்றும் கோட்டில் கத்தை கத்தையாக ரூ.50 லட்சம் ரூபாய் நோட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.

பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலம் ஜோலாப்பூரை சேர்ந்த பப்பு ராவுத்தூர் (வயது 35) என்பதும் உரிய ஆவணங்கள் இல்லாத ஹவாலா பணத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அவர் கூறும்போது, பொன்னானியை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க இந்த ஹவாலா பணம் கடத்தி சென்றதாக கூறினார். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் விசாரணை நடத்தி வருகிறார். #HawalaMoney

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com