

கோவை:
கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வருகின்றன. அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட போக்குவரத்து துறை அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வின்போது பஸ்களை அனுமதிக்கப்படாத வழித்தடங்களில் இயக்குவது, கொடுத்த வழித்தடத்தில் முழுமையாக இயக்காதது, கால அட்டவணையை பின்பற்றாதது, கூடுதல் நடத்துனரை அமர்த்துவது, அனுமதிக்கப்படாத இடத்தில் பஸ்களை நிறுத்துவது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் வாகனங்கள் நில்லாமல் செல்லுதல், கூடுதல் கட்டணம் வசூலிப்பது, வண்ண விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட குறைபாடுகளை களைந்து விதிகளுக்குட்பட்டு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும் பொது மக்களுக்கு எவ்வித சிரமங்கள் இன்றி பாதுகாப்பாகவும், புகார்கள் ஏதும் இல்லாமல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீண்டும் விதிமுறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பஸ்கள் மீது 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.