அம்மா ஸ்கூட்டருக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை கலெக்டர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்திற்கு பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை கலெக்டர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.
அம்மா ஸ்கூட்டருக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்: கோவை கலெக்டர் அறிவிப்பு
Published on

கோவை:

கோவை கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் அம்மா இருசக்கர வாகனத்திட்டம் பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மகளிருக்கு 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் (எது குறைவோ) மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்று, தங்கள் பணியிடங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர ஏதுவாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயனடையும் பயனாளிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுனங்களிலோ அல்லது சுயமாகவோ தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். பயன் பெறும் பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறையாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் இருசக்கர ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ், பயனாளிகள் கொள்முதல் செய்யும் இருசக்கர வாகனங்கள் 1.1.2018-க்கு பின் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். 125 சி.சி. திறனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இந்திய வாகனச் சட்டம் 1988-ன்படி பதிவு செய்யப்பட தக்க வாகனமாக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு சான்று, இருப்பிடச் சான்று, ஓட்டுநர் உரிமம், வருமானச் சான்று, பணிபுரிவதற்கான சான்று - சுய தொழில் புரிவதற்கான சான்று, ஆதார் அட்டை, கல்விச் சான்று (குறைந்தபட்ச தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி), பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை- ஆதரவற்ற மகளிர் 35 வயதுக்கு மேல் திருமணமாகாத பெண்கள் - திருநங்கைகள் ஆகியோருக்கான சான்றிதழ், சாதிச்சான்றிதழ் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுத்திறனாளிகள் உரிய அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்று, இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி அல்லது விலைப்பட்டியல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக ஓட்டுநர் உரிமம் மற்றும் வயது சான்றிதழ் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தகுதியுள்ள பயனாளிகள் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்ப படிவங்களை இன்று (22-ந்தேதி) முதல் பெற்று, நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ இதே அலுவலகங்களுக்கு அடுத்த மாதம் 5-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்து இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com