

தொண்டி:
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
குறிப்பாக கிழக்கு தெரு, மீனவர் காலனி, மாரியம்மன் கோவில் தெரு, காந்தி நகர், வடக்கு தெரு ,தெற்கு தெரு, பழங்கோட்டை,தேவர்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ஒரு முறை நான்கு குடம் தண்ணீர் குடிநீர் குழாய்களில் கிடைக்கிறது. சில நேரங்களில் அதுவும் கிடைப்பதில்லை.
இதற்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் குடிநீருக்கென ஒரு ஊரணி அமைத்து அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைத்தனர். மழை இல்லாததால் இந்த ஊரணியும் வறண்டு காணப்படுகிறது.
இதனால் இந்தப்பகுதி மக்கள் டிராக்டரில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூபாய் 5-க்கு விலை கொடுத்து வாங்கிவந்தனர். தற்போது குடம் ஒன்றுக்கு 2 ரூபாய் உயர்த்தி ஒரு குடம் ரூபாய் 7க்கு விற்கப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு தண்ணீருக்கு மட்டும் 300 ரூபாய் செலவாகிறது.
கிராம தலைவர்கள் விலையை குறைக்க சொன்னதால், அவசர தேவைகளுக்கு வந்து கொண்டிருந்த தண்ணீர் வண்டிகள் திருப்பாலைக்குடிக்கு வரவில்லை.
ஆர்.எஸ்.மங்கலம் ஆவரேந்தல் பகுதியிலிருந்து வரும் இந்த தண்ணீரும் உவர் தண்ணீரானதால் குடிநீர் தவிர்த்த மற்ற தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டியுள்ளது.
திருப்பாலைக்குடி பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்ககோரி 2001-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர்.
மாவட்ட நிர்வாகம் டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டுவந்த போதும் நிரந்தரமாக தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மாதம் சாலை மறியல் போராட்டம் நடத்த பொதுமக்கள் முடிவு செய்த நிலையில் உதவி ஆட்சியர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தனியார் டேங்கர் லாரிகளில் நாகாச்சி, உச்சிபுளியில் இருந்து கொண்டுவந்து ஒரு குடம் ரூபாய் 15-க்கு விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களின் தாகத்தை தீர்க்க போர்கால நடவடிக்கையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என இந்தப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews