கூட்டுறவு சங்க தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்கியது

5 கட்டமாக நடக்கும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
கூட்டுறவு சங்க தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்கியது
Published on

சென்னை:

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவி காலம் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது.

இதனால் புதிதாக நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படுகிறது.

கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கூட்டுறவு வீட்டு வசதித்துறை, பனைப் பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிக துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, வேளாண்மை துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 18,775 சங்கங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை கூட்டுறவு தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

தொடக்க சங்கங்கள் மத்திய சங்கங்கள், மாநில சங்கங்கள் என்ற 3 அடுக்கு முறையில் கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாட்டில் செயல்படுவதால் இதற்கான தேர்தல்களை 5 கட்டங்களாக நடத்த கூட்டுறவு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் உள்ள 18,435 தொடக்க கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்களை முதற்கட்டமாக 4 நிலைகளில் நடத்துகின்றனர்.

இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். மேலும் இந்த பதவிக்காக அ.தி. மு.க., தி.மு.க.வில் உள்ள ஏராளமான பேர் இன்று மனு தாக்கல் செய்ய கூட்டுறவு சங்கங்களுக்கு வந்திருந்தனர்.

முதல்நிலை தேர்தலுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கான தேர்தல் ஏப்ரல் 2-ந்தேதி நடைபெறுகிறது.

2-ம் நிலைக்கான வேட்பு மனு 31-ந்தேதி பெறப்படுகிறது. இதற்கான தேர்தல் ஏப்ரல் 7-ந்தேதி நடக்கிறது. 3-ம் நிலைக்கான வேட்பு மனு ஏப்ரல் 9-ந்தேதி பெறப்படுகிறது. இதற்கான தேர்தல் ஏப்ரல் 16-ந்தேதி நடைபெறுகிறது.

4-ம் நிலைக்கான வேட்பு மனு ஏப்ரல் 16-ந்தேதி பெறப்படுகிறது. இதற்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது.

இதன்பிறகு தலைவர் துணைத் தலைவர்களுக்காக 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

அரசு துறைகளின் தலைவர்கள் மாநில தேர்தல் அலுவலர்களாகவும், அந்த துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மாவட்ட தேர்தல் அலுவலர்களாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், சென்னை மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்கள் மாவட்ட தேர்தல் பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com