

சென்னை:
தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-
உறுப்பினர் புகழேந்தி தங்களுடைய தொகுதிப் பிரச்சினையை பற்றிப் பேசும்போது, மதுராந்தகம் ஏரியை தூர் வாருவதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அரசு வருவாய் ஈட்டும் முறையில், ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, நீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்காக, பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டுமென்ற வினாவையும் இங்கே தொடுத்திருக்கின்றார். அதுவும் ஆய்வு செய்யப்படும் என்று இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
அதோடு, அவருடைய தொகுதியிலே பல இடங்களைக் குறிப்பிட்டு, அங்கேயெல்லாம் விபத்து ஏற்படுகிறது, அந்த விபத்தைத் தவிர்ப்பதற்காக மேம்பாலம் கட்டவேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை வைத்தேன், நீங்கள் நிறைவேற்றவில்லை என்ற ஒரு வினாவைத் தொடுத்திருக்கின்றார். அதுமட்டுமல்லாமல், நீங்கள் டெல்லி செல்கின்றீர்கள், பிரதமரை அடிக்கடி சந்திக்கின்றீர்கள் என்று சொல்லியிருக்கின்றார். சந்திப்பது உண்மை தான். நான் பிரதமரை சந்திக்கின்ற பொழுது தமிழகத்திலே இருக்கின்ற பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி, நமக்குத் தேவையான திட்டங்களைப் பெறுவதற்கும், தேவையான நிதியாதாரங்களைப் பெறுவதற்கும் டெல்லி சென்றேன்.
உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, அவர்கள் இருக்கின்ற காலத்திலே அந்தப் பணியை மேற்கொண்டிருந்தால், இந்த விபத்தையெல்லாம் தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் அந்தப் பொறுப்பிலே நீங்கள் இருந்தீர்கள்.
உறுப்பினர் புகழேந்தி, கிட்டத்தட்ட 365 பேர் இறந்திருப்பதாக சொல்கின்றார். நான் அதற்குத் தான் பதில் சொல்கிறேன். இதை ஏற்கனவே உங்களுடைய கட்சியைச் சேர்ந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது இந்தத் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் இந்த உயிர்பலி ஏற்பட்டிருக்காது என்பதைத் தான் குறிப்பிட விரும்புகின்றேன். இன்றைக்கு ஆளுகின்ற கூட்டணியில் நாங்கள் இல்லை. தமிழகத்திலே தான் நாங்கள் ஆளுகின்றோம், மத்தியிலே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம், கோரிக்கை நிறைவேற்றினால் தான் உறுப்பினர் சொல்கின்ற திட்டம் நிறைவேறும்.
இவ்வாறு அவர் பேசினார்.