காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். #TheniForestFire #குரங்கணிதீ
காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
Published on

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் இன்று இரண்டு குழுவினர் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட பலர் இதில் சிக்கினர். விசாரணையில் அவர்கள் சென்னை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

காட்டுத்தீ குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த வனக்காவலர்கள், ஊர்மக்களுடன் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காட்டுத் தீயில் சிக்கியவர்கள் பற்றி தகவல் கிடைத்ததும் துணை முதல்வர், வனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மீட்பு பணிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை கோரியுள்ளோம். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com