புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மலைவாழ் மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000/- ரூபாய் வீதம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மலைவாழ் மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்: முதல்வர் உத்தரவு
Published on

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமீபத்தில் ஏற்பட்ட ‘ஒகி’ புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் சீரமைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது. பாதிக்கப்பட்ட மீனவர் மற்றும் மீனவர் அல்லாத குடும்பங்களுக்கு அரசால் உரிய நிவாரணம் அறிவிக்கப்பட்டு, உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. 

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களுக்கும், மீனவர்களுக்கும் பல்வேறு நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டார், பேச்சிபாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கடையால், பொன்மனை ஆகிய பேருராட்சிகளில் உள்ள 1524 மலைவாழ் குடும்பங்கள் ‘ஒகி’ புயலால் தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் விடுத்த கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் தற்போது எந்தவிதமான தொழிலையும் செய்ய முடியாத நிலைமையையும் கருத்தில் கொண்டு, அம்மக்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா 5,000/- ரூபாய் வீதம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com