ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு: தலைவர்கள் கருத்து

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவு: தலைவர்கள் கருத்து
Published on

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்புகள் தொடர்பாக அரசியல் தலைவர்களின் கருத்துக்களைப் பார்ப்போம்.

தம்பிதுரை: அ.தி.மு.க. அணிகள் இணைந்து செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் எங்களுக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என நம்புகிறேன். கருத்து வேற்றுமைகளை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

மாபா பாண்டியராஜன்: முதல்வரின் இரு அறிவிப்புகளையும் மனதார வரவேற்கிறேன். தர்மயுத்தத்தின் முக்கிய கோரிக்கைகளை முழுமையாக ஏற்று அறிவித்தது வரவேற்கத்தக்கது. மேலும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அணிகள் இணைந்தால் அ.தி.மு.க. மேலும் வலுவடையும்

எச்.ராஜா: அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு முதல்வரின் இந்த அறிவிப்புகள் வழிவகுக்கும். அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த தொடர்பும் கிடையாது.

திருநாவுக்கரசர்: ஜெயலிலதா மரணம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு உண்மை தெரிந்தால் நல்லதுதானே? வேதா நிலையம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறேன்.

டி.கே.எஸ்.இளங்கோவன்: தி.மு.க.வைப் பொருத்தவரை விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது கண்துடைப்பு. நிர்ப்பந்தம் காரணமாகவே விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. விசாரணை ஆணையம் அமைத்து அதிகாரிகளை நியமித்து யார் வீட்டு பணத்தை செலவு செய்கிறார்கள்?

ப.சிதம்பரம்: முதல்வரின் அறிவிப்பு அரசியல் ரீதியானது. ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை கிடைத்தது.

புகழேந்தி: டி.டி.வி. தினகரனின் கோரிக்கைக்கு ஏற்ப அரசு உத்தரவிட்டுள்ளதாகவே கருதுகிறேன். விசாரணை துரிதமாக நடைபெற வேண்டும். மக்களிடையே எழுந்துள்ள சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. அணிகள் இணைப்புக்கான கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது.

வெற்றிவேல்: டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதாலேயே விசாரணைக் கமிஷன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம், வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற இவர்களுக்கு உரிமை இல்லை. அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும்.

முத்தரசன்: ஜெயலலிதாவின் வேதா இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் மற்ற சொத்துக்களையும் அரசுடைமையாக்க  வேண்டும். அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது என்பதையே முதலமைச்சரின் இந்த அறிவிப்பு காட்டுகிறது.
 
திருமாவளவன்: முதலமைச்சரின் அறிவிப்பில் உள்நோக்கம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஜெயலலிதாவின் மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மக்களின் ஐயத்தை போக்கவே முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு நீதி விசாரணை தெளிவுபடுத்தும் என நம்புகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com