முக்கொம்பில் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை - முதல்வர் அறிவிப்பு

திருச்சி முக்கொம்பில் வெள்ளப்பெருக்கினால் மதகுகள் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #MukkombuDam #EdappadiPalaniswami #NewGateway
முக்கொம்பில் உடைந்த மேலணைக்கு பதில் ரூ.325 கோடியில் புதிய கதவணை - முதல்வர் அறிவிப்பு
Published on

திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி காவிரி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் பிரியும் பகுதியில் உள்ள 9 ‌ஷட்டர் மதகுகள் உடைந்துள்ளது. அதனை தற்காலிகமாக சீரமைப்பதற்காக துரிதமாக, வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் 4 நாட்களில் அந்த சீரமைப்பு பணிகள் நிறைவடையும்.

கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அணை உடையவில்லை சட்டர் பழுதானது. அது சரி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை பொறுத்தவரை அதிகமான கழிவு நீர் டேமிற்குள் வந்துள்ளது. அதனால் ஏற்பட்ட அரிப்பினால் சட்டர்களில் பழுது ஏற்பட்டது. அதை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது முதற்கட்டமாக 8 நாட்கள் அதிக அளவிலான நீர் வெளியேறியது. அதற்கு பிறகு 2-ம் கட்டமாக 12 நாட்கள் தொடர்ந்து அதிக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அதன் அழுத்தத்தினால் தற்போது இந்த அணை உடைந்துள்ளது.

ஆண்டுதோறும் அணைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. திடீரென ஏற்படும் உடல் நலக்குறைவு போன்றது தான் இந்த உடைப்பு. இது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து. இதற்கான பொறியியல் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும்.

இந்த அணை ரூ.325 கோடியிலும், தெற்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்கால் அணை ரூ.85 கோடியிலும் சேர்த்து மொத்தம் ரூ.410 கோடியில் இரண்டு புதிய கதவணைகள் கட்டப்படும்.

இந்த பணிகள் 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என பொறியியல் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். இதற்கான பணிகள் வேகமாகவும், துரிதமாகவும் தொடங்கப்படும்.

இதற்காக நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். கதவணை எந்த விதத்தில் கட்டப்படும் என்று நிபுணர் குழு அமைக்கப்பட்டு ஆராயப்படும். இதனால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

காவிரி கொள்ளிடத்தை விட இரண்டு அடி தாழ்வாக உள்ளது. இப்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. இதில் ஒன்றரை மீட்டர் தடுப்பு ஏற்படுத்துகிறார்கள். மணல் மூட்டையை வைத்து தற்காலிகமாக தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர், கபினி அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. மேட்டூருக்கு வரும் தண்ணீரானது 15 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

அணையில் மதகுகள் உடைந்ததற்கு மணல் குவாரிகள் காரணம் அல்ல. மணல் குவாரிக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. குறிப்பிட்ட தூரத்திற்கு தொலைவில்தான் மணல் குவாரிகள் இருக்கிறது. வரைமுறைக்கு உட்பட்டுதான் மணல் அள்ளப்பட்டுள்ளது. எல்லா ஆட்சிகளிலும் இப்படித்தான் மணல் அள்ளப்பட்டுள்ளது. அ.தி. மு.க. ஆட்சியில் மட்டும் தான் அள்ளப்படுகிறது என்பது தவறான கருத்து.

இந்த மணல் அள்ளுவது படிப்படியாக குறைக்கப்படும். அதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படுகிறது. மணலின் செயல்பாட்டை படிப்படியாக குறைக்கும் வகையில் எம்.சாண்ட் மணல் பயன்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முக்கொம்பில் பலமிழந்த நிலையில் மேலும் பல மதகுகள் உடையும் அபாயம் இருந்ததால் முக்கொம்பு சுற்றுலா தளம் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com