அரசு பள்ளி வளாகத்தில் துப்புரவு பெண் தொழிலாளி பிணம் - போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் இன்று அரசு பள்ளி வளாகத்தில் துப்புரவு பெண் தொழிலாளி பிணத்தை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுசீலா
சுசீலா
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் நாகராஜா கோவில் பகுதியை அடுத்த திலகர்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா(வயது62).

இவர் நாகர்கோவில் ஒழுகினசேரி சாலையில் மகளிர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள அரசு பள்ளியில் பகுதி நேர துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகும் தினமும் பள்ளிக்குச் சென்று துப்புரவு வேலைகளை பார்த்து வந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் வேலைக்கு வந்து விட்டு மாலையில் தான் வீடு திரும்புவார்.

இதுபோல நேற்றும் வேலைக்கு வந்தவர் மாலையில் பணி முடிந்து வீடு திரும்பி விட்டார்.

இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்குச் சென்றார். அப்போது தலைமை ஆசிரியரின் அறைக்கு அருகே சுசீலா, பிணமாக கிடந்தார். அவரது ஆடைகள் கலைந்து அலங்கோலமான நிலையில் காணப்பட்டது. தலையிலும் காயங்கள் இருந்தது. அதில் இருந்து வடிந்த ரத்தம் அந்த பகுதியில் உறைந்து கிடந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் மோகனஅய்யர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுசீலாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுசீலா இறந்தது எப்படி? என்பது பற்றியும் விசாரித்தனர். நேற்று மாலையில் பணி முடிந்து வீடு திரும்பிய சுசீலா, இரவில் பள்ளி வளாகத்திற்கு வந்தது எப்படி? இங்கு அவரை யாரும் கற்பழித்து கொலை செய்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

இப்பள்ளியின் முன்புற கதவு காலையில் தலைமை ஆசிரியர் வரும் வரை பூட்டியே கிடந்தது. அப்படி என்றால் சுசீலாவை யாராவது பள்ளியின் பக்கவாட்டு மதில் சுவர் வழியாக உள்ளே அழைத்துச் சென்றிருக்கலாம். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாம். அப்போது ஏற்பட்ட தகராறில் சுசீலா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் பற்றி பள்ளி தலைமை ஆசிரியர் கூறும் போது, இறந்து போன பெண் சுசீலா ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தது அதிர்ச்சியாக உள்ளது. அவர் நோயால் இறந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை என்றார்.

இந்த சம்பவம் இன்று ஒழுகினசேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com