ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஐகோர்ட் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

ஆந்திரா மாநிலம், அமராவதி நகரில் கட்டப்பட்ட புதிய ஐகோர்ட் வளாகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று திறந்து வைத்தார். #CJI #CJIRanjanGogoi #APHighCourt
ஆந்திர மாநிலத்துக்கு புதிய ஐகோர்ட் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்
Published on

அமராவதி:

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா என்ற தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பின்னர் இரு மாநிலங்களுக்கும் பொதுவாக ஐதராபாத் நகரில் ஆந்திரா, தெலுங்கானா உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.

முன்னர் ஆந்திராவின் தலைநகரமாக இருந்த ஐதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்துக்கு சொந்தமாகிப்போன நிலையில், ஆந்திரா மாநிலத்தின் புதிய தலைநகரமாக அமராவதி நகரம் உருவாகி வருகிறது.

மிக பிரமாண்டமான உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகிவரும் அமராவதி நகரில் ஆந்திரா மாநிலத்துக்கென தனியாக புதிய உயர்நீதிமன்றம் அமைக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம்  அனுமதி அளித்தது.

மத்திய அரசின் இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, ஜனவரி முதல் தேதியில் இருந்து அமராவதியில் புதிதாக செயல்பட வேண்டிய இந்த நீதிமன்றம் இந்தியாவின் 25-வது உயர்நீதிமன்றமாகும்.  ஆந்திரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரவீன் குமார் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 15 நீதிபதிகளும் பதவி எற்றனர்.

ஆனால், அமரவாதி நகரில் உயர்நீதிமன்றம் கட்டும் பணிகள் நிறைவடையாததால் விஜயவாடா நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக உயர்நீதிமன்றம் இயங்கும் என ஆந்திர மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில், அமராவதி நகரம் நெலப்பாடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஐகோர்ட் வளாகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று திறந்து வைத்தார். முதலைமைச்சர் சந்திரபாபு நாயுடு, மந்திரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.  #CJI  #CJIRanjanGogoi #APHighCourt

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com