

நாகர்கோவில்:
இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்து மூன்றாவது நாள் உயிர்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுகிறிஸ்துவின் உயிர்ப்பை ஈஸ்டர் பண்டிகையாக மகிழ்ச்சிப் பெருவிழாவாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு சாம்பல் புதன்கிழமையுடன் தொடங்கிய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக் காலமாக கடைபிடித்தனர். அதன்பிறகு வரும் வாரம் பெரிய வாரமாக கருதப்படும். இந்த நாளில் தாழ்மையின் மேன்மையை உணர்த்தும் பக்தர்களின் பாதங்களை கழுவும் பெரிய வியாழன் நிகழ்வும் இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளியும் கடைப்பிடிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து இன்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்திலும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மின் விளக்கு அலங்காரங்களால் ஜொலித்தது.
மேலும் ஆலயங்களில் நள்ளிரவில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த ஈஸ்டர் பிரார்த்தனையில் கோட்டார் ஆயர் நசரேன் சூசை கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். இதில் மறைமாவட்ட செய லாளர் இம்மானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், ஆயரின் செய லாளர் திவ்யன், கோட்டார் மறைவட்ட குருகுல முதல்வர் மைக்கேல் ஆஞ்சலூஸ், பங்குத்தந்தை குணபால் ஆராய்ச்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். திரளான பொதுமக்களும் இதில் கலந்துகொண்டு பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களையும் மகிழ்வுடன் பரிமாறிக் கொண்டனர். கோட்டார் ஆலயத்தில் காலையிலும் பங்குத்தந்தை குணபால் ஆராய்ச்சி தலைமையில் பிரார்த்தனை நடந்தது.
திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலயத்தில் நடந்த பிரார்த்தனையில் குழித்துறை ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் கலந்துகொண்டார்.
இதேபோல அசிசி ஆலயம், குளச்சல் காணிக்கை மாதா ஆலயம், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துஅரசர் ஆலயம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களிலும் ஈஸ்டர் பிரார்த்தனை நடந்தது.
சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் அதிகாலையில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.