

நெல்லை:
பாளை என்.ஜி.ஓ. ‘பி’ காலனியை சேர்ந்தவர் ஜீவராஜ் (வயது54). இவர் அதே பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருந்து வருகிறார். இவரது மகளுக்கு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
அதில் அவரை சேர்க்க பணம் கட்டுவதற்காக மனைவியின் நகைகளை பாளை ஸ்டேட் வங்கியில் அடமானம் வைத்து ரூ.2 லட்சத்து 60ஆயிரம் பணம் வாங்கினார். பின்பு அந்த பணத்தையும், தனது செல்போனையும் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து கொண்டு பாளை தபால் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு வந்தார்.
அங்கு தனது மகளுக்கு புதிய சிம்கார்டு வாங்குவதற்காக நண்பர் ஒருவர் வருகைக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்து நின்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ஹெல்மெட்டை ஒரு வாலிபர் எடுத்துக்கொண்டு பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குள் வேகமாக சென்றார். அதனை பார்த்த பாதிரியார் ஜீவராஜ், அந்த வாலிபரை பின் தொடர்ந்து சென்றார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிள் அருகே நின்ற மற்றொரு வாலிபர், பாதிரியாரின் மோட்டார் சைக்கிள் பெட்டியை திறந்து அதிலிருந்த ரூ.2லட்சத்து 60 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் செல்போனை திருடி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்நிலையில் பாதிரியார் ஜீவராஜ் ஹெல்மெட்டை எடுத்து சென்ற வாலிபரிடம் இருந்து ஹெல்மெட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளின் பெட்டி திறந்து கிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் செல்போன் திருட்டுபோயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாதிரியார் ‘கொள்ளை, கொள்ளை’ என்று கத்தியபடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு சென்று தனது ஹெல்மெட்டை எடுத்து சென்ற வாலிபரை தேடினர்.
அதற்குள் அந்த வாலிபரும் தப்பிச்சென்று விட்டார். ஹெல்மெட்டை தவறுதலாக எடுத்து செல்வது போல் நடித்து ஏமாற்றி பாதிரியாரிடம் மர்ம நபர்கள் நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து பாதிரியார் ஜீவராஜ், பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.