சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை

சிந்தாதிரிப்பேட்டையில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

சென்னை:

சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ் என்ற தமிழரசன் (வயது 37).

போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு 9 மணி அளவில் சிந்தாதிரிப்பேட்டை படவட்டம்மன் கோவில் தெரு-லாசர் தெரு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு கும்பல் திடீரென சுற்றி வளைத்தது. அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதனை பார்த்ததும், தமிழரசன் அங்கிருந்து ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.

உடலில் பல இடங்களில் தமிழரசனுக்கு வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் உயிருக்கு போராடினார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் 1 மணி அளவில் தமிழரசன் உயிரிழந்தார்.

தமிழரசன், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பே சசி என்பவரை கொலை செய்துள்ளார்.

இது தொடர்பாக தமிழரசனுக்கும், பாம்பே சசியின் உறவினரான இமானுக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதனை தீர்த்துக் கொள்ளும் வகையிலேயே, இமான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழரசனை கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இமான் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழரசன் கொலை காரணமாக சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று இரவு பதட்டம் நிலவியது. இதனால் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com