

தேனி:
போடி அருகே உள்ள வெம்பக்கோட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி சாந்தி (வயது 54). இவர் சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று கம்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதாக சாந்தி தனது மகனிடம் கூறிச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பி வரவில்லை. ஏற்கனவே சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத் தலைவர், செயல்பட மதுரை கோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த சாந்தி காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சாந்தியின் மகன் விமலேஸ்வரன் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமலேஸ்வரன் சின்னமனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.