

புதுடெல்லி:
சீனாவிடம் இருந்து நமது நாட்டின் இறக்குமதி அதிகமாக உள்ளது. அதே சமயம் சீனாவுக்கான ஏற்றுமதி குறைவாக உள்ளது. இந்த வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இந்திய தயாரிப்புகளுக்கு சீன சந்தையில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்படி சீனாவிடம் கேட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க உதவும் வகையில் சீன அரசாங்கம் 28 வகையான மருந்துகளுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது.
அனைத்து வகை புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட 28 மருந்துகளின் மீதான இறக்குமதி வரி மே 1-ம் தேதி முதல் நீக்கப்பட்டிருப்பட்டிருப்பதாகவும், இது இந்தியாவின் மருந்து தொழில் மற்றும் மருந்து ஏற்றுமதிக்கு நல்ல செய்தி என்றும் இந்தியாவுக்கான சீன தூதர் லுவோ ஜாவோகி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி வரி குறைப்பானது எதிர்காலத்தில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைக்க உதவும் என்றும் சீன தூதர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறையானது 2017-18ம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் காலகட்டத்தில் 36.73 பில்லியன் டாலராக இருந்தது. 2016-17 நிதியாண்டில் 51 பில்லியன் டாலராக இருந்தது.
தொழில் தொடங்குவதற்கு ஏதுவான சூழலை சீனா மேலும் மேம்படுத்தும் என்று கூறியுள்ள சீன தூதர், வெளியுலகிற்கு சீனாவின் கதவு திறந்து இருக்கும் என்றும் இந்திய தொழில்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். #ChinaRemovesDuties #IndianExport