

புதுடெல்லி:
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னிணி வீராங்கனைகளான சாய்னா நேவால், பி.வி.சிந்து, வீரர்கள் எச்.எஸ்.பிரனாய் ஆகியோர் தங்கள் முதல் சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
இன்று இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். உலகத் தரநிலையில் 4-ம் இடத்தில் உள்ள யமகுச்சியும், சமீபத்தில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சாய்னாவும் மோதியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
முதல் செட்டை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் போராடி இழந்தார் சாய்னா. இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீராங்கனையே ஆதிக்கம் செலுத்தினார். 14-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த அவர், அதிரடியாக 8 புள்ளிகளை தொடர்ந்து பெற்று, அந்த செட்டை எளிதில் கைப்பற்றினார். 18-21, 11-21 என்ற நேர்செட்களில் சாய்னா தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் யமகுச்சியிடம் 4-வது முறையாக சாய்னா தோல்வி அடைந்துள்ளார். யமகுச்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய், சீன வீரர் செக் யி லீயை எதிர்கொண்டார். இப்போட்டியில் பிரனாய் 19-21, 17-21 என்ற செட்கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்தியாவின் முன்னனி வீராங்கனை சாய்னா, பிரனாய் இருவரும் தோல்வி அடைந்த நிலையில், இனி நடப்பு சாம்பியன் பி.வி.சிந்துவை மட்டுமே இந்தியா நம்பி உள்ளது.