

புதுச்சேரி:
நெல்லித்தோப்பு பெரியார்நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது35). எலக்ட்ரிக்கல் காண்டிராக்டர். இவரது மனைவி சாந்தினி (27). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் விஸ்வநாதன் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இதுபற்றி விஸ்வநாதன் தனது மனைவி சாந்தினியிடம் அடிக்கடி கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு மனைவி சாந்தினி கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று சமாதானம் செய்து வந்தார்.
இந்த நிலையில் விரக்தியில் இருந்து வந்த விஸ்வநாதன் நேற்று மதியம் திடீரென தற்கொலை செய்து கொள்ள வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தினி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஸ்வநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.