குமரியில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவியதாக பீதி - வடமாநில இளைஞர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல்

கன்னியாகுமரியில் குழந்தை கடத்தல் கும்பல் ஊடுருவி உள்ளதாக கிளம்பிய பீதியால் வடமாநில இளைஞர்கள், சந்தேகப்படும் நபர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.
பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த பெண் படுத்திருந்த காட்சி
பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த பெண் படுத்திருந்த காட்சி
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தை யொட்டி உள்ள கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

குழந்தைகள் மற்றும் வயதான பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் மட்டுமே கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது கொள்ளை கும்பல் அல்லது குழந்தைகளை கடத்துவோர் கைவரிசையாக இருக்கும் என்று தகவல் பரவியது.

கேரள போலீசாரும் இக்கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. இதனால் கேரளாவை யொட்டி இருக்கும் குமரி மாவட்டத்திலும் இச்சம்பவம் பீதியை கிளப்பியது.

இந்நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை கிராமங்களில் உள்ள சில வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. இதுபோல கன்னியாகுமரி, குளச்சல், கோடிமுனை, வாணியக்குடி உள்ளிட்ட கிராமங்களிலும் உள்ள சில வீடுகளின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இதனால் உஷாரான கிராம மக்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவர்களே கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர். ஊருக்குள் சந்தேகப்படும்படி நுழைபவர்களை தடுத்து விசாரித்தனர்.

இதில், குளச்சல் சைமன் காலனி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். கையில் சாக்கு பையுடன் காணப்பட்ட அவரது நடவடிக்கைகள் ஊர் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் ஊர் மக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விசாரணையில், அந்த நபர் தேங்காய்பட்டணம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி சிவக்குமார் என தெரிய வந்தது.

இதுபோல மேல மணக்குடி கிராமத்தில் சந்தேகப்படும்படி நின்ற வட மாநில பெண் உள்பட 3 பேரை கிராமமக்கள் பிடித்து விசாரித்தனர். அவர்களின் பேச்சும், நடவடிக்கையும் சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.

உதய மார்த்தாண்டம், கருங்கல், வாணியக்குடி போன்ற ஊர்களிலும் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.

போலீசாரின் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்ட பின்னரும் நேற்று குளச்சலை அடுத்த சைமன் காலனியில் சவேரியார் அடிமை என்பவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இன்று குளச்சல் மெயின் ரோடு, லட்சுமிபுரத்தில் பால்ராஜ் என்ற விவசாயி வீட்டின் மேல் மாடி ஜன்னலில் 4 கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்ததும், குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை மீனவ கிராமத்தில் இன்று காலை வடமாநில பெண் ஒருவர் சந்தேகப்படும்படியாக திரிந்தார். அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனால் அவர் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. அவளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். ஆத்திரம் அடைந்த சிலர் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த பெண் மயக்கம் அடைந்து கீழே சரிந்தார்.

இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராமன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அந்த பெண்ணை ஆம்புலன்சில் ஏற்றினர்.

ஆனால் ஆம்புலன்சை அங்கிருந்து புறப்பட விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். எங்கள் பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுவதும், சந்தேக நபர்கள் திரிவதும் தொடர்கதையாகி வருகிறது. எனவே குழந்தைகள் கடத்தல் கும்பல் தொடர்பாக போலீசார் எங்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதுவரை ஆம்புலன்சை இங்கிருந்து செல்ல விடமாட்டோம் என தடுத்தனர். சுமார் 30 நிமிடத்துக்கும் மேலாக அந்த ஆம்புலன்சு சிறைபிடிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து ஆம்புலன்சை மீட்டு கொண்டு சென்றனர். பொதுமக்களின் தாக்குதலால் காயம் அடைந்த பெண், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவங்கள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். எங்காவது கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும், எஸ்.பி.யின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் இதுவரை குழந்தை கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. என்றாலும் போலீசார் உஷாராக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டிட தொழில், செங்கல் சூளை, ஓட்டல் மற்றும் பல்வேறு சிறு தொழில் செய்ய வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் குமரி மாவட்டத்தில் தங்கி உள்ளனர். இவர்களின் போர்வையில் குழந்தை கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அனந்தநாடார் குடியிருப்பில் உள்ள ஏ.டி.எம். சென்டரை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வடமாநில கொள்ளையர் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் குழந்தை கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட வட மாநில கொள்ளையர்கள் இங்கு ஊடுருவி இருக்கலாம் என்ற சந்தேகம் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com