

மதுரை:
மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்த 23 வயதான அருண்குமார், தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். தனது சிறு வயதிலேயே தந்தை வீட்டை பிரிந்து சென்றதால் தாயார் அரவணைப்பில் வளர்ந்தார். அவருடைய தாயாரோ, மிளகாய் பொடி கம்பெனியில் வேலை செய்து, அருண்குமாரை பி.எஸ்.சி. வரை படிக்க வைத்தார்.
“வறுமையுடன்தான் வளர்ந்தேன். ஏழைகளின் நிலை எனக்கு தெரியும். எனவே என்னால் ஆன உதவிகளை அவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியமாக ஆனது” என்று கூறுகிறார், அருண்குமார்.
மேலும் அவர், “ஒரு நாள் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றேன். அப்போது, அங்கு ஆதரவற்ற ஒரு முதியவரை கண்டேன். அவரது நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. நிர்க்கதியற்று இருந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த சிலர் அந்த முதியவரை அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களே அந்த முதியவரை பராமரித்தது தெரியவந்தது.
இதன் பின்னர் மதுரையில் உள்ள இதயம் அறக்கட்டளையில் முதியவர்களை மீட்கும் பணியில் என்னையும் ஒரு ஆர்வலராக சேர்த்துக்கொண்டேன். 4 ஆண்டுகளாக அதன் மூலம் பல முதியவர்களுக்கு உதவி செய்து வந்தேன்.
இதற்கிடையே உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆதரவற்று சுற்றி திரிந்தவர்களை இந்த ஊரடங்கு பெரிதும் பாதித்தது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடிவு செய்தோம். மீட்கப்பட்டவர்களுக்கு முடித்திருத்துதல், ஆடைகள்-உணவு கொடுத்தல், அவர்களுக்கு தேவையான முதல் உதவிகளை செய்தல், அவர்களுடனேயே இருந்து அவர்களை கவனிப்பது உள்ளிட்ட பல வேலைகளை என்னிடம் ஒப்படைத்தனர்.
அதன் விளைவாக, 75 நாட்களில் மதுரை மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம், போலீசாருடன், நான் சேவையாற்றிய அறக்கட்டளையினரும் இணைந்து 400-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை மீட்டோம். அதில் 170 பேரை பராமரிக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது.
மதுரை காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அவர்களை கவனிக்க முகாம் அமைத்தார்கள். முகாமில் அந்த 170 பேரையும் தனி ஒருவராக இருந்து கவனித்தேன். அத்துடன் இல்லாமல் அந்த ஆதரவற்றவர்களின் குடும்பத்தாரையும் விசாரித்தேன். அதில் 130 பேரை அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்தேன். இதுதவிர 20 பேரை மருத்துவ முகாமில் வைத்து தற்போதும் பராமரித்து வருகிறேன். இன்னும் 20 பேருக்கு மன நல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
எனது இந்த சேவையை பாராட்டித்தான், சுதந்திர தின விழாவில், மாநில இளைஞர் விருதை தமிழக அரசு வழங்கி உள்ளது. இந்த விருது எனக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. என்னைப் போன்ற தன்னார்வலர்களுக்கும், உதவி செய்ய நினைக்கும் அனைவருக்கும் சொந்தமானது. முதியவர்களை ஆதரவற்றவர்களாக விடக்கூடாது. முதியோர் இல்லங்கள் இருக்கக்கூடாது என்பதே என்னுடைய இலக்கு. அரசு தந்துள்ள இந்த விருது என்னை சேவை செய்ய மேலும் ஊக்குவிக்கும். வரும் காலங்களிலும் இந்த சேவை தொடரும்”
இவ்வாறு ஆர்வமுடன் கூறினார், மதுரை இளைஞர் அருண்குமார்.