

சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், அரக்கோணம், அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 36 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், 15 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டிடங்கள், அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டிடங்கள் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
சென்னை புளியந்தோப்பு, திருவள்ளூர் செவ்வாய்பேட்டை, செங்கல்பட்டு பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம் மற்றும் பாலூர், கோயம்புத்தூர் வெல்ஸ்புரம், திருநெல்வேலி நல்லம்மாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 6 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகக் கூடங்கள்.
மதுரை பரவை, தேனி வருசநாடு, தஞ்சாவூர் நடு விக்கோட்டை, புதுக்கோட்டை சுப்ரமணியபுரம், பெரம்பலூர் நெய் குப்பை, திருவண்ணாமலை கண்ணக்குருக்கை, திருநெல்வேலி பேட்டை ஆகிய இடங்களில் 7 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 7 விடுதிக் கட்டிடங்கள்.
திருவண்ணாமலை ஜமுனா மரத்தூரில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டிடம் என மொத்தம் 22 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பணியில் இருக்கும் போது காலமான 21 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு, கருணை அடிப்படையில் 16 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கும், 5 நபர்களுக்கு தட்டச்சர் பணியிடங்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 வாரிசுதா ரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீனமயமாக்கப்பட்ட கோயம்புத்தூர் லூம்வேர்ல்டு விற்பனை நிலையம் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு சொந்தமான மதுரை, மேலமாசி வீதியிலுள்ள காதி கிராப்ட் கட்டடத்தை 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட “காதி மார்ட்” கட்டிடம் ஆகியவற்றையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மதுரை, மேலமாசி வீதியிலுள்ள காதி கிராப்ட் கட்டிடம், அதன் பழமை மாறாமல் தற்போது சீரமைக்கப்பட்டு, புதிய தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ள கதர் மற்றும் கிராமப் பொருட்கள் விற்பனை வளாகம், நவீன மர அலமாரிகள், ஜெனரேட்டர், குளிர்சாதன வசதி, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து, நவீனமயமாக்கப்பட்ட “காதி மார்ட்” கட்டிடம் ஆகியவற்றை முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், ராஜலட்சுமி, எஸ்.பி.வேலு மணி, ஓ.எஸ்.மணியன், பாஸ் கரன், தலைமைச் செயலாளர் சண்முகம் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.