

கூடங்குளம்:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இருக்கன்துறை கிராமத்தில் மீன் அரவை ஆலை மற்றும் எலும்பு அரவை ஆலை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான கழிவு பொருட்கள் தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து லாரிகளில் இரவு நேரங்களில் வரும்.
அவ்வாறு கழிவுகளை லாரியில் ஆலைகளுக்கு கொண்டுவரும்போது சில கழிவுகள் லாரிகளில் இருந்து சாலை ஓரங்களில் மற்றும் காட்டுப்பகுதியில் விழுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வந்தனர். மேலும் இதுகுறித்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த வழியாக கேரளாவில் இருந்து ஆலைக்கு கோழிக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் வந்தன. இதனை அறிந்த இருக்கன்துறை, நக்கநேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து முற்றுகையிட்டனர். உடனே ஒரு லாரியில் இருந்த டிரைவர் மற்றும் கிளீனர் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஒரு லாரியின் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளத்தை சேர்ந்த செல்வம் (வயது 46), தேரைகால்புதூரை சேர்ந்த மூர்த்தி (வயது 33) ஆகியோரை பொதுமக்கள் பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து செல்வம், மூர்த்தி ஆகியோரை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். லாரிகளையும் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அதேபோல் கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கூடங்குளம் அருகே உள்ள ஊரல்வாய்மொழியில் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த அந்த ஊர் மக்கள் உடனடியாக அந்த லாரியை மறித்து சிறைபிடித்தனர். மேலும் இதுகுறித்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் லாரியை ஓட்டி வந்த களியக்காவிளையை சேர்ந்த ராகவன் மகன் ரெத்தீசை கைது செய்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளின் உரிமையாளர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பிடிபட்ட லாரிகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்துள்ளனர். நெல்லை சுகாதார துணை இயக்குனர் வரதராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வரதராஜன் தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, கழிவுகளின் தரம் அறிந்து லாரியின் உரிமையாளர்களுக்கு அபராத தொகை விதிக்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் அந்த கழிவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, குழிதோண்டி புதைக்கப்பட்டது.