50-வது டெஸ்டில் விளையாடும் புஜாரா

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் புஜாரா, தனது 50-வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார்.
50-வது டெஸ்டில் விளையாடும் புஜாரா
Published on

கொழும்பு:

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் வருகிற 3-ந் தேதி (திங்கள்) கொழும்பில் தொடங்குகிறது.

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாராவுக்கு இந்த போட்டி 50-வது டெஸ்ட் ஆகும். 50-வது டெஸ்டில் விளையாடும் 31-வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

29 வயதான புஜாரா 2010-ம் ஆண்டு டெஸ்டில் அறிமுகம் ஆனார். 49 டெஸ்டில் 83 இன்னிங்சில் விளையாடி 3,906 ரன் எடுத்துள்ளார். 7 இன்னிங்சில் ஆட்டம் இழக்காததால் அவரது சராசரி 52.18 ஆகும். 12 சதமும், 15 அரை சதமும் எடுத்துள்ளார். 206 ரன் குவித்தது அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

ராகுல் டிராவிட்டின் வரிசையான 3-வது இடத்தில் விளையாடும் புஜாரா தனது 50-வது டெஸ்டில் 4 ஆயிரம் ரன்னை தொடுவார்.

அஸ்வின் கடந்த டெஸ்டில் தான் தனது 50-வது போட்டியை தொட்டார். இதில் அவர் 4 விக்கெட்டை வீழ்த்தினார். முதல் டெஸ்டில் 153 ரன் குவித்த புஜாரா தனது 50-வது டெஸ்டில் முத்திரை பதிக்கும் வகையில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com