செக் மோசடி வழக்கு: நடிகர் ரித்தீஷ் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்

செக் மோசடி வழக்கில் நடிகர் ரித்தீஷ் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜரானார். இந்த விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
செக் மோசடி வழக்கு: நடிகர் ரித்தீஷ் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்
Published on

சென்னை:

அமெரிக்காவில் வசிக்கும் ஆதிநாராயணன் சுப்பிரமணியன். நடிகரும், தி.மு.க. முன்னாள் எம்.பி.யு மான ரித்தீஷ் மீது பண மோசடி புகாரை போலீசில் கொடுத்திருந்தார்.

அதில், நடிகர் ரித்தீஷ் தன்னிடம் பல கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகர் ரித்தீஷ், அவரது மனைவி ஜோதீஸ்வரி, நாகநாதசேதுபதி உட்பட பலர் மீது மோசடி வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு நடிகர் ரித்தீஷ் தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், நடிகர் ரித்தீஷ் மீது, ஆதிநாராயணன் சுப்பிரமணியன், பூந்தமல்லி விரைவு குற்றவியல் கோர்ட்டில் செக் மோசடி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி அனுஷா முன்பு விசாரணையில் உள்ளது.

வழக்கில் புகார்தாரர் ஆதிநாராயணன், வாக்கு மூலம் அளித்து, ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்து விட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ரித்தீஷ் ஆஜராக வில்லை. இதையடுத்து இன்று விசாரணைக்கு கண்டிப்பாக ரித்தீஷ் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நடிகர் ரித்தீஷ் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு ரித்தீஷ், தன் மீது பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘பொய் வழக்கு என்பதை நிரூபிக்க தங்களிடம் உள்ள ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறினார். இதை ரித்தீஷ் ஏற்றுக் கொண்டார். விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் புகார்தாரர் சார்பில் வக்கீல் சுதன்ராஜ் ஆஜரானார்

X

Maalai Malar
www.maalaimalar.com