

பாகூர்:
புதுவை கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை மீனவ கிராமத்தில், நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, அங்குள்ள அம்மன் கோவில் பகுதியில் வாலிபர் ஒருவர் தியான நிலையில் அமர்ந்திருந்தார். அருகே புதிய கார் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த மீனவர்கள் அந்த வாலிபரிடம் சென்று விசாரித்தனர். ஆனால் மீனவர்களின் கேள்விக்கு, அந்த வாலிபர் பதில் ஏதும் கூறாமல் மவுனமாக இருந்தார். தொடர்ந்து மீனவர்கள் அந்த பகுதியில் திரண்டு வந்து அந்த வாலிபரிடம் விசாரித்து கொண்டே இருந்தனர்.
அப்போது, அந்த வாலிபர் என்னை விடுங்கள் என கூறிவிட்டு காரில் கடற்கரை பகுதிக்கு வேகமாக ஓட்டி சென்றார். ஆனால் கடற்கரை மணலில் கார் சிக்கிக் கொண்டது.
உடனே அந்த வாலிபர் காரில் இருந்து இறங்கி கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தன்னை கடவுள் அழைத்ததாகவும், அவருடன் பேசவே இங்கு வந்ததாக கூறியுள்ளார்.இதையடுத்து வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சென்னையை சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர் விஜய் (வயது 31) என்பது தெரியவந்தது. போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து கிருமாம்பாக்கம் வரவழைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதிய கார் வாங்கியதால் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு, தனது மகன் வந்ததாக தெரிவித்தனர். விசாரணைக்கு பின், அந்த வாலிபரை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். #tamilnews