

சென்னை:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கடந்த 11-ம் தேதி காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர்.
இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சுற்றுலா பயணிகளை பேஸ்புக் (முகநூல்) மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வந்த ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சுற்றுலா அலுவலக உரிமையாளர் பிரபு (30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பாக, சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைத்து அனுப்பியதாக கூறப்படும், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்டை பிடிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பீட்டர் வான் கெய்ட் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது. #Tamilnews