சென்னை மாணவி கற்பழிப்பு: ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் - உதவியாளர் கைது

சென்னை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், ஆரணி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
டாக்டர் ஜெயபிரகாஷ்
டாக்டர் ஜெயபிரகாஷ்
Published on

ஆரணி:

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாய், சென்னை மாநகராட்சியில் துப்புரவு வேலை செய்கிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதம் முன்பு அந்த மாணவி, வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், மாயமான மாணவி ஓரிரு நாட்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வயிறு வலியால் துடி துடித்தார். தாய், அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றார். மருத்துவ பரிசோதனையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. தாய் அதிர்ந்து போனார்.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பையூர் எம்.ஜி.ஆர். நகரில் மாணவியின் தாய்க்கு உறவினரான சித்ரா என்கிற பெண் வசித்து வருகிறார். மாயமான போது, ஆரணியில் உள்ள உறவினர் சித்ராவுக்கு மாணவி போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அவர், வேறு எங்கும் செல்ல வேண்டாம். ஆரணி வா... ஜவுளிக்கடையில் வேலை வாங்கி தருகிறேன். என் வீட்டிலேயே தங்கி வேலை செய் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தார். இதை நம்பி, மாணவியும் ஆரணிக்கு சென்றார். மாணவியை, சித்ரா தனது வீட்டில் தங்க வைத்தார்.

சித்ராவிற்கும், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல்களை, வாடகைக்கு தனியார் வாகனம் மூலம் கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் வேலை செய்யும் சுரேஷூக்கும் தொடர்புள்ளது.

சித்ரா, சுரேஷ் உதவியுடன், மாணவியை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் தள்ளினார். மாணவியை வெளியே தப்பித்து செல்ல விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர்.

இந்த நிலையில், ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் மயக்க மருந்து நிபுணராக இருக்கும் டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் வார்டு உதவியாளர் பாண்டியன் ஆகிய 2 பேரும், சுரேஷ் மூலம் சித்ராவின் வீட்டிற்கு வந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஆசை இணங்க மறுத்த மாணவிக்கு, போதை மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு கற்பழித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தான், அந்த கொடூர கும்பலிடம் இருந்து மாணவி தப்பித்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தனது வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, மாணவியின் தாய், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கோயம்பேட்டு போலீசார், நள்ளிரவு ஆரணிக்கு வந்து, டாக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் உதவியாளர் பாண்டியனை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ் வருவதையறிந்து மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்திய அவரது உறவினர் சித்ரா மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அவர்கள் பிடிபட்டால், சென்னை மாணவியை போலவே, வேறு யாராவது சிறுமிகள் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரா? என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவரக்கூடும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com