

சேலம்-சென்னை 8 வழிசாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் அமைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணி நடந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நாழிக்கல்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இங்கு நேற்று முன்தினம் கருப்புக் கொடி ஏந்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் மண்ணை கட்டியணைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்திற்கு நாழிக்கல்பட்டியில் சங்க தலைவர் கந்தசாமி, ஒருங்கிணைப்பாளர் எஸ்.செல்வராஜ், ஆச்சாங்குட்டப்பட்டியில் ஒருங்கிணைப்பாளர்கள் வி.செல்வராஜ், அய்யந்துரை, ராமலிங்கபுரத்தில் பொருளாளர் சிவகாமி, ஒருங்கிணைப்பாளர் கவிதா ஆகியோரும், உத்தம சோழபுரத்தில் நிர்வாகிகள் ரமேஷ், மணிகண்டன், அயோத்தியாப் பட்டணத்தில் செயலாளர் நாராயணன் ஆகியோரும் தலைமை தாங்கினர்.
இதுகுறித்து செல்வராஜ் நாராயணன் கூறியதாவது:-
விவசாய நிலங்களை அழித்து, 8 வழிச்சாலை கொண்டு வர மத்திய அரசு ஏன்? இவ்வளவு அவசரம் காட்டுகிறது. இது வளர்ச்சி திட்டமா? அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கனிம வளங்களை கொடுப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறதா? என்பதை அரசு விளக்க வேண்டும்.
விவசாய நிலங்களை அழிப்பதால் உயிரினங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு நோய்கள் மனிதனுக்கு வரவாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது. வருங்கால சந்ததியினர் நலமுடன் வாழ்வதற்காக விளைநிலங்களை அழிக்கக்கூடாது.
குறிப்பாக தமிழகத்தில் சாலைகள், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்காக 3 லட்சம் ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதனால் விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து விடும் நிலை ஏற்படுகிறது. ஆகவே இந்த விவசாய நிலங்களை காப்பாற்றுவதற்காகவே, ‘‘என் மண், எனக்கு சொந்தம்’’ என்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.