சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 பேர் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள பிரிபெய்டு ஆட்டோ மையத்தில் நேற்று இரவு அதே பகுதியில் டிரைவர்களாக பணிபுரியும் 5 பேர் தகராறில் ஈடுபட்டனர்.

அவர்கள் பிரிபெய்டு ஆட்டோ சங்க தலைவரின் பெயரை கூறி அவர் எங்கே? என்று கேட்டு போதையில் ரகளை செய்தனர்.

அப்போது அங்கிருந்த வியாசர்பாடியை சேர்ந்த சோமு, அவரது அண்ணன் ராஜா இருவரும் தட்டிக் கேட்டனர்.

இதையடுத்து 5 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இருவரையும் அரிவாளால் வெட்டினர்.

சோமுவின் உச்சந்தலையில் 12 இடங்களில் வெட்டு விழுந்தது. ராஜாவுக்கு வலது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதன் பின்னர் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பெரியமேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது வால்டாக்ஸ் ரோடு பகுதியில் கார் மற்றும் ஆட்டோக்களை ஓட்டி வரும் டிரைவர்களாக ராஜேஷ், சரவணன், ஜார்ஜ், அமுல் ஆகியோரே அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீதும் மற்றொரு ஆட்டோ டிரைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த மோதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com