கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி தாமதம்

சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது.
கண்ணன்கோட்டை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி தாமதம்
Published on

ஊத்துக்கோட்டை:

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மற்றும் நெமிலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களில் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

ஆரணி, கொசஸ்தலை ஆற்றுபடுகைகளில் அமைந்துள்ள சிறுவானூர், மோவூர், கீழானூர், புல்லரம்பாக்கம், காரணை மேலானூர், மாகரல், வெள்ளியூர் பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிருந்தும் தண்ணீர் பெறப்படுகிறது. ஆனால் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

இதனை கருத்தில் கொண்டு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.330 கோடி மதிப்பீட்டில் 1485.64 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட செயற்கை அணை கட்டப்படும் என்று 2012-ம் ஆண்டு அறிவித்தார்.

இதில் இரண்டு ஏரிகளின் பரப்பளவு 600 ஏக்கர் ஆகும். 600 ஏக்கர் நிலம் விவசாயிகளின் பட்டா விளைச்சல் பூமி ஆகும். மீதம் உள்ள 285.64 ஏக்கர் நிலம் அரசு புறம் போக்கு மற்றும் வனப்பகுதியாகும்.

நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. சுமார் 55 சதவித விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை ரூ. 12 லட்சம் பெற்று அரசுக்கு அளித்து விட்டனர்.

இந்த நிலையில் 2014-ம் ஆண்டு மத்திய அரசு மாநில அரசுகள் விவசாயிகளிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யும் போது மார்கெட் விலையை விட 4 மடங்கு அதிகம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதனால் மீதம் உள்ள 45 சதவித விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 12 லட்சம் வேண்டாம் என்றும், ரூ. 48 லட்சம் கொடுத்தால்தான் விளை நிலங்களை அளிப்போம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

கையகப்படுத்திய நிலத்தில் அரசு 2013ம் வருடம் அணை கட்டும் பணிகளை தொடங்கியது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேறும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீர் கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.

இதற்காக ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பத்தில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் அமைக்கும் பணி முடிந்து விட்டன.

அதே போல் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் அணைக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தன. மேலும் 7.15 கிலோ மீட்டர் தூரம் வரை கரைகள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றன.

கரைகள் மீது வாகணங்கள் வந்து செல்லும் விதமாக சாலை போடும் பணிகள் 60 சதவிதம் முடிந்துள்ளன. அணை அமைக்கும் பணிகள் தொடங்கும் போது விவசாயிகள் அதிகாரிகளிடம் அணை முழுவதுமாக நிரம்பும் போது உபரி நீரை திறந்து விடுவதற்காக மதகு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி மதகு அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன.

அணையிர் இருந்து சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு தண்ணீர் வழங்க பெரிய தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 60 சதவிதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலம் வழங்காமலும் இழப்பீடு தொகை பெறாமல் உள்ள சுமார் 350 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் தற்போது நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இவர்களின் பயிர்களுக்கு தண்ணீர் செல்லாதபடி அதிகாரிகள் மண் மேடு அமைத்துள்ளனர் என்று விவசாயிகள் கூறினர்.

வர்தா புயலின்போது நாசமடைந்த பயிர்களுக்கு மாநிலம் முழவதும் அரசு இழப்பீடு வழங்கியது. ஆனால் எங்களுக்கு வழங்க வில்லை என்று கூறினர். வேளாண்துறை பயிர் கடன், மாணிய விலையில் உரம், விதைகள் வழங்குவது இல்லை என்றும் தெரிவித்தனர்.

அரசுக்கு நிலம் கொடுக்காத வரை நாங்கள் இப்படிதான் நடந்து கொள்வோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயிகள் கூறினர்.

அரசின் இப்படிபட்ட முரண்பட்ட நடவடிக்கையால் 350 ஏக்கரில் நிலப்பரப்பில் அணை கட்டும் பணிகள் இன்னும் தொடங்கவே இல்லை. அணை கட்டுமான பணிகள் சம்பந்தமான தலைமை அலுவலகம் ஊத்துக்கோட்டையில் உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் விவசாயிகளை அணுகும் முறை சரியில்லை என்று கூறப்படுகிறது.

இனியாவது தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கூடுதலாக இழப்பீடு தொகை வழங்கி சென்னை நகர மக்களின் முக்கியமான குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க நீர் தேக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com