

சென்னை:
சென்னை அமைந்தகரை அண்ணா வளைவு அருகில் வசித்து வருபவர் பிரவீன்குமார். சவுகார் பேட்டையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் கார் டிரைவராக வெங்கட்ராமன் (43) என்பவர் 10 வருடமாக வேலை செய்து வருகிறார். நேற்றிரவு பிரவீன் கார் டிரைவரிடம் 1½ கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியை கொடுத்து வீட்டில் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளியை எடுத்துக் கொண்டு வெங்கட்ராமன் காரில் அமைந்தகரை நோக்கி சென்றார்.
டெய்லர் சாலையில் செல்லும் போது அவரது காரை மற்றொரு கார் வழி மறித்து நின்றது.
அந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினார்கள். அதில் 2 பேர் டிரைவரை மிரட்டி வெளியே இழுத்து போட்டனர்.
பின்னர் அந்த காரை அவர்கள் ஓட்டிச் சென்றனர். கொள்ளை கும்பல் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளது.
சென்னையின் முக்கிய பகுதியாக திகழும் கீழ்ப்பாக்கத்தில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கார் டிரைவர் வெங்கட்ராமன் போலீசில் புகார் செய்தார்.
கொள்ளைப்போன தங்கம், வெள்ளி மற்றும் காரின் மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் நகைக்கடை அதிபர் மற்றும் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த இடத்தில் சி.சி.டி.வி. கேமரா இருந்துள்ளது. அதில் கொள்ளை சம்பவம் பதிவாகி உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
தங்கம், வெள்ளி கொள்ளை சம்பவம் உண்மையிலேயே நடந்துள்ளதா? நாடகமாடுகிறார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.