

சென்னை:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக சிறப்பு கண்காணிப்பு குழுவினர் டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆவடி பகுதியில் மட்டும் ரூ.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளாட்சித்துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் வகையில் இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.