சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. #SterliteProtest
சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு
Published on

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நோய்களை பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

இதையடுத்து, ‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 28ந்தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ‘ஸ்டெர்லைட்’ ஆலையில் நேரடி ஆய்வு செய்தது. ஆய்வு செய்த அதிகாரிகள் அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த டிசம்பர் மாதம் 15ந்தேதி பிறப்பித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளதாகவும், ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது என்றும், மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது என்றும் கூறி தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதித்தது. பின்னர், தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டை நாடலாம் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வேதாந்தா நிறுவன சட்டபிரிவு பொது மேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், மின்சார வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #SterliteProtest

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com