லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்

பேராசிரியர்கள் நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #ViceChancellorGanapathi #BharathiyarUniversity
லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

சென்னை:

உதவி பேராசியர் பணி நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

அவருடன் பேராசிரியர் தர்மராஜூம் கைதானார். கடந்த 2016-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட 80 பேராசிரியர் பணியிடங்களில் பலரிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் பேராசிரியர் அல்லாத பணியிடங்களை நியமித்ததில் லஞ்சம், விடைத்தாள்களை தயாரித்து வழங்கியதில் லஞ்சம், மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கியதாக போலி பில்கள் தயாரித்து லஞ்சம் என துணைவேந்தர் கணபதி மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது.

துணைவேந்தர் கணபதியின் தூண்டுதலின்பேரில் பேராசிரியர் தர்மராஜ் ரூ. 30 லட்சம் லஞ்சம் கேட்டு உதவி பேராசிரியர் சுரேஷிடம் பேசி இருக்கிறார். இதையடுத்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்ததின் அடிப்படையில் போலீசார் துணைவேந்தரை கையும், களவுமாக கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், துணைவேந்தர் கணபதி தன்னை ஜாமீனில் விடுவிக்ககோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதி, துணைவேந்தர் கணபதியை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், கோவை நகரை விட்டு வெளியேறக் கூடாது, மறு உத்தரவு வரும் வரை லஞ்ச ஒழிப்பு விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் பேரில் துணைவேந்தர் கணபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. #ViceChancellorGanapathi #BharathiyarUniversity #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com