இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் சென்னை என்ஜினீயர் திடீர் தற்கொலை

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் சென்னை என்ஜினீயர் ரெயில் தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்த விக்னேஷ்.
தற்கொலை செய்த விக்னேஷ்.
Published on

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது 2-வது மகன் விக்னேஷ் (25).

இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சென்னையில் ஒரு கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.

இதற்கிடையே விக்னேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) கொடுமுடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விக்னேஷ் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக இருவர் வீட்டு உறவினர்களும் திருமண மண்டபத்தில் கூடினர்.

திருமணத்தையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து விக்னேஷ் புது மாப்பிள்ளை களையுடன் ஊருக்கு வந்தார்.

தனக்கு திருமணம் நடப்பதையொட்டி நேற்று ஊரில் உள்ள தனது நண்பர்களை வரவழைத்து “பார்ட்டி’’யும் கொடுத்து சந்தோ‌ஷமாக இருந்தார்.

இந்த நிலையில் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் குரங்கன் பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதியில் புதுமாப்பிளை விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி கிடைத்த தகவல்படி ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புது மாப்பிள்ளை தற்கொலையில் மர்மம் நீடித்து வருகிறது. சந்தோ‌ஷமாக சென்னையில் இருந்து வந்த விக்னேஷ் நண்பர்களுக்கு திருமண பார்ட்டியும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய காரணம் என்ன? அவருக்கு திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று மண மாலை சூட இருந்த புது மாப்பிள்ளை விக்னேசின் மர்ம சாவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com