சென்னை கமி‌ஷனர் அலுவலகம் அருகில் மது போதையில் காரை நிறுத்தி தள்ளாடிய 3 பேர் சிக்கினர்

சென்னை கமி‌ஷனர் அலுவலகம் அருகில் போதை ஆசாமிகள் காரை நிறுத்தி தள்ளாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை கமி‌ஷனர் அலுவலகம் அருகில் மது போதையில் காரை நிறுத்தி தள்ளாடிய 3 பேர் சிக்கினர்
Published on

சென்னை:

வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தின் முன்பு ஈ.வெ.கே. சம்பத் சாலையில் உள்ள பொதுமக்கள் நுழைவு வாசல் அருகே நேற்று மாலை 5 மணி அளவில் மத்திய அரசு சின்னம் பொறித்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

காரின் உள்ளே 2 பேர் அமர்ந்திருந்தனர். டிரைவரை காணவில்லை. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் காரில் இருந்த 2 பேரில் ஒருவர் மட்டும் காரை விட்டு இறங்கி ஓரமாக போய் நின்றார்.

இன்னொருவர் காருக்குள்ளேயே அமர்ந்திருந்தார். இதுபற்றி அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வேப்பேரி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் காரை ஓட்டி வந்த டிரைவர் சற்று தூரத்தில், கமி‌ஷனர் அலுவலக சுற்றுச்சுர் அருகே தள்ளாடிய படி நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து வந்து காரை எடுக்கும்படி போலீசார் கூறினர்.

கார் உடனடியாக ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் காரில் இருந்த 2 பேரும் பின்பக்கமாக சென்று காரை தள்ளினர். அப்போது கார் ஸ்டார்ட் ஆனது. டிரைவர் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை நோக்கி சென்ற கார் இடது புறமாக திரும்பிச் சென்று விட்டது. இதனால் டிரைவருடன் காரில் வந்தவர்களும், போலீசாரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். போதையில் தள்ளாடிய 2 பேரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தப்பி ஓடிய டிரைவரையும் மடக்கி பிடித்தனர். 3 பேர் மீதும் மது போதையில் காரை ஓட்டிச் சென்றதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

3 பேரும் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் என்பதும் தெரிய வந்தது. கமி‌ஷனர் அலுவலக வாசல் அருகே போதை ஆசாமிகள் காரை நிறுத்தி தள்ளாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com