சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலையா?: காருடன் எரிந்து 3 பேர் பலியான சம்பவத்தில் பரபரப்பு தகவல்

மாமல்லபுரம் அருகே காருடன் எரிந்த சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆடிட்டர் குடும்பத்துடன் தற்கொலையா?: காருடன் எரிந்து 3 பேர் பலியான சம்பவத்தில் பரபரப்பு தகவல்
Published on

மாமல்லபுரம்:

குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயதேவன் (55). ஆடிட்டர். இவரது மனைவி ரமாதேவி (48), தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் திவ்யஸ்ரீ (26).

கடந்த 27-ந்தேதி 3 பேரும் காரில் சுற்றுலா செல்வதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றனர். அன்று இரவு மாமல்லபுரத்தை அடுத்த மணமை அருகே உள்ள தனியார் வீட்டுமனை காலி இடத்தில் திடீரென அவர்களது கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

காரில் இருந்த ஏ.சி.யில் தீப்பிடித்ததால் வெளியே வர முடியாமல் 3 பேரும் இறந்தனரா? அல்லது அவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில் தற்போது பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளது.

திவ்யஸ்ரீக்கும், பதன் கோட்டில் ராணுவ கேப்டனாக பணியில் இருக்கும் சரத்துக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான முதலே கணவன்- மனைவு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யஸ்ரீ பெற்றோர் வீட்டுக்கு வந்து இருக்கிறார்.

இதுதொடர்பாக தாம்பரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள். போலீசார் திவ்யஸ்ரீயின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசும்படி அறிவுறுத்தி இருந்தனர். இதனால் ஜெயதேவன் குடும்பத்தினர் மனவேதனையில் இருந்தனர். அவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகிய 3 பேரும் பலியாகி விட்டனர். அவர்கள் குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர்.

இதுதொடர்பாக திவ்யஸ்ரீயின் கணவரான ராணுவ கேப்டன் சரத்திடம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமணி 5 மணி நேரம் விசாரணை நடத்தினார். இதில் சில தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்த ஜெயதேவன் உள்பட 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் 3 பேர் சாவில் போலீசாருக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளது. இதைத் தொடர்ந்து கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com