சென்னை ஏரிகள் 10 நாளில் வறண்டுவிடும்: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

வெயில் சுட்டெரிப்பதால் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இன்னும் 10 நாட்கள் கழித்து சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஏரிகள் 10 நாளில் வறண்டுவிடும்: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
Published on

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் குறைந்த அளவு தண்ணீர் தான் உள்ளது.

இதில் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு மைதானமாக காட்சி அளிக்கிறது.

3231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் இப்போது 55 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

இதனால் ஏரியில் இருந்து குடிநீருக்கு தண்ணீர் எடுக்க முடியாத நிலை உருவாகி விட்டது. ஏரி தண்ணீர் வெயிலின் காரணமாக ஆவியாகி வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரி மைதானமாக மாறிவிடும்.

இதேபோல் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இப்போது 391 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 1850 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 266 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் உள்ளது (கொள்ளளவு 3645)

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரி தான் சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மிகப்பெரிய ஏரியாக இருந்தது. இப்போது ஏரி தண்ணீர் குறைந்தது மட்டுமல்ல. 10 நாளில் முழுமையாக வறண்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் சென்னை பகுதிக்கு வீராணம் ஏரியில் இருந்து இதற்கு முன்பு தண்ணீர் வந்தது. இப்போது அந்த ஏரியும் வறண்டுவிட்டது. இதனால் மாற்று ஏற்பாடாக நெய்வேலி சுரங்க தண்ணீரை வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு கொண்டு வந்து அங்கிருந்து வீராணம் குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வருகின்றனர்.

இதுதவிர கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தண்ணீர் பெறப்பட்டு அதுவும் தென் சென்னைக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து குடிநீர் பெறப்பட்டு லாரி மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கல்குவாரிகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.


சென்னைக்கு தினமும் 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 530 மில்லியன் லிட்டர் தண்ணீர் தான் கொடுக்கப்படுகிறது. பொது மக்களுக்கு 1 நாள் விட்டு ஒருநாள் தான் தண்ணீர் கிடைக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com