

சென்னை:
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனாலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் 10-ந் தேதிக்கு பிறகு நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுபற்றி தனியார் வானிலை அதிகாரி வெதர்மேன் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மும்பையில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவிலும் இந்த மழை நீடிக்கிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய பகுதிகளில் லேசாக மழை பெய்கிறது.
ஆனாலும், தமிழகத்தின் மையப்பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி உருவாகி உள்ளது.
கடந்த வாரம் இதுபோன்று ஏற்பட்ட நிகழ்வின் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்தது. இப்போது மீண்டும் வெப்பச்சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி மீண்டும் உருவாகி உள்ளது.
இது வங்கக் கடல் பகுதி வரை பரவி வருவதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். வருகிற 10-ந்தேதிக்கு பிறகு 20-ந்தேதி வரை பல இடங்களில் கனமழை எதிர்பார்க்கலாம்.
வால்பாறை, நீலகிரி, பெரியாறு நீர்ப்பிடிப்பு நெல்லை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களிலும் மழை அளவு அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சென்னையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 20 நிமிட நேரத்துக்கு பெய்த மழையால் ரோட்டில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.