

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்குபகுதியில் போடி சி.பி.ஏ கல்லூரி வரலாற்றுத்துறையும், மதுரை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையமும் இணைந்து நடத்திய தொல்லியல் சார்ந்த களஆய்வில் கி.பி.10ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள ஏல விவசாயிகள் சங்கக்கல்லூரியின் முதல்வர் ராஜகுமாரன் வழிகாட்டுதல்படி இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்களான மாணிக்கராஜ், கருப்பசாமி, ஆய்வு மாணவர் ராம்குமார் மற்றும் நெல்லூர் அரசுப்பள்ளியின் ஆசிரியர் கருப்பையா, மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலர் முனைவர் சாந்தலிங்கம், முனைவர் பட்ட ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் அடங்கிய குழு நரசிங்கபுரம் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள மலை அடிவாரப்பகுதியில் உள்ளூர் மக்களால் பிணக்கா, புணல்கா மற்றும் கோம்பைக்காடு எனப்பல பெயர்களில் அழைக்கப்படும் பகுதியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான மாமரத்தோட்டத்தில் பெரும்பாறை என்ற இடத்தில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக் உரல் ஒன்று கண்டுபிடித்துள்ளனர்.
இக்கல்வெட்டு பற்றி முனைவர் சாந்தலிங்கம் கூறியதாவது, இந்த செக் உரல் பூமிக்கு கீழ் சுமார் 3 அடிக்கு கீழ்பாறையில் வெட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ முத நீர் முரி மீ மங்கரை யுகங்து தட்டான் ஆசிரியர் பாறையி இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு.
முது நீர் முரி மீ மங்கரை என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லறை குறிக்கும். ஆசிரியம் என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும். எனவே ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்கு வந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களின் பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். செல்லக்கலிங்கரை மகன் இம்மக்களின் பயன்பாட்டிற்காக செக் உரல் ஒன்று வெட்டித்தந்துள்ளான் என்ற செய்தியை தருகிறது என்கிறார்.
மேலும் இவ்வாய்வு பற்றி மாணிக்கராஜ் கூறுகையில், இம்மலையை சுற்றி பண்டையக்காலத்தில் மக்கள் தனித்தனி கூட்டமாக ஆங்காங்கே வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குள் அடிக்கடி சண்டையிடுவதும் நிகழ்ந்துள்ளது. அப்போது ஒரு கூட்டத்தினர் இங்கு வந்து அடைக்கலம் அடைந்துள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும் இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.
இவை தவிர இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டையக்கால மக்களின் வாழ்விடங்கள் தொல்லியல் தடயங்கள், பாறை ஓவியங்கள், பானை ஓடுகள், வட்டெழுத்துக்கள் வெட்டப்பட்ட செக் உரல்கள் மற்றும் நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்றுத்தடயங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகின்றன.