சொகுசு கார் பதிவில் வரி ஏய்ப்பு - சுரேஷ் கோபி எம்.பி. மீது குற்றப்பத்திரிகை

சுரேஷ் கோபி எம்.பி.க்கு எதிராக எர்ணாகுளம் கோர்ட்டில் கேரள குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி
Published on

திருவனந்தபுரம்:

பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் தனது சொகுசு காரை புதுச்சேரியில் பதிவு செய்து அதை கேரளாவில் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது. புதுச்சேரியில் வாகன பதிவு கட்டணம் குறைவு என்பதால் சுரேஷ் கோபி புதுச்சேரியில் தங்கி இருப்பது போல போலி முகவரி ஆவணங்களை தாக்கல் செய்து சொகுசு காரை பதிவு செய்ததாகவும், இதன் மூலம் கேரள அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து கொச்சி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேப்போல பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், பிரபல நடிகை அமலாபால் ஆகியோர் மீதும் புதுச்சேரியில் போலி ஆவணம் மூலம் சொகு காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு எர்ணாகுளம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதுதொடர்பான விசாரணையின்போது பகத்பாசில், அமலாபால் ஆகியோர் கேரளாவில் வரி செலுத்தி அந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர். ஆனால் சுரேஷ்கோபி மட்டும் இதுவரை வரி செலுத்தவில்லை.

இந்த நிலையில் சுரேஷ் கோபிக்கு எதிராக எர்ணாகுளம் கோர்ட்டில் கேரள குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். வரி ஏய்ப்பு செய்ததாகவும், போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும் சுரேஷ் கோபி மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுரேஷ்கோபிக்கு 7 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com