

‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
இந்த நிலையில் பர்மிங்காமில் நேற்று நடந்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ரசிகர்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) இந்திய அணி வெற்றி பெற்றது.
* கடைசி 4 ஓவர்களில் மட்டும் இந்தியா 72 ரன்களை விளாசியது. இது 22 முதல் 35-வது ஓவருக்குள் (14 ஓவர்) எடுக்கப்பட்ட ஸ்கோரை விட அதிகமாகும்.
* ரோகித் சர்மா (91 ரன்), ஷிகர் தவான் (68 ரன்), விராட் கோலி (81 ரன்), யுவராஜ் (53 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஒரே இன்னிங்சில் இந்தியாவின் டாப்-4 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது நிகழ்வாகும். ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு முறை இவ்வாறு செய்திருக்கிறார்கள்.
* ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் முதல் விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேகரித்தனர். சாம்பியன்ஸ் கோப்பையில் அவர்கள் ஜோடியாக 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 3-வது முறையாகும். இதுவும் ஒரு சாதனையாகும். இதற்கு முன்பு சாம்பியன்ஸ் கோப்பையில் வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால்-கெய்ல், தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ்-கிரேமி சுமித் ஆகியோர் தலா 2 முறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கொடுத்ததே அதிகபட்சமாகும்.