

சென்னை:
சென்னை மாநகரில் செயின் பறிப்பு சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. நேற்று மட்டும் 11 இடங்களில் நகை கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
அவனது பெயர் ராகேஷ் (21). சென்னை மூலக்கடை சத்தியவாணி முத்துநகரை சேர்ந்தவன். நேற்று முன் தினம் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோதுதான் கோட்டூர்புரத்தில் இவன் கைவரிசை காட்டினான்.
மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் ஹெல்மெட் அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் ஹெல்மெட் அணியாத நிலையில் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டது வீடியோவில் பதிவாகி இருந்தது.
இதை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையிலான தனிப்படையினர் செயின் பறிப்பு நடைபெற்ற 36 மணி நேரத்தில் கொள்ளையன் ராகேசை கைது செய்துள்ளனர். அவன் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் உள்ளன.
ஒரே நாளில் 5 இடங்களில் ராகேஷ் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
ராகேசின் கூட்டாளியான மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே சென்னையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். செயின் பறிப்பை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.