

சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் ரெயில் பெட்டிகளை யார்டுக்கு கொண்டு செல்லும் பணியில் ஷண்டிங் என்ஜின் ரெயில் ஈடுபடுத்தப்படும். இன்று காலையும் யார்டில் இருந்து ஷண்டிங் என்ஜின் புறப்பட்டு சென்ட்ரலுக்கு வந்தபோது யார்டில் தடம் புரண்டது.
தண்டவாளம் இல்லாத பகுதிக்கு என்ஜின் சென்றதால் கவிழ்ந்தது. இன்று காலை 6.30 மணிக்கு நடந்த இந்த விபத்தால் சென்ட்ரல் நிலையத்தில் கடுமையாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ட்ரலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டன.
அதே போல சென்ட்ரலில் இருந்து புறப்படக்கூடிய ரெயில்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. பிளாட்பாரம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் இருந்தும் ரெயில் சேவையை தொடங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
கோவை, பிருந்தாவன், டபுள்டக்டர் உள்ளிட்ட பல்வேறு ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
அதுபோல வெளியூர்களில் இருந்து வந்த ரெயில்கள் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர் போன்ற ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதற்கிடையில் தடம் புரண்ட ‘ஷண்டிங்’ என்ஜினை மீட்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த பகுதியில் புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டு அதில் ‘ஷண்டிங்’ என்ஜினை தூக்கி நிறுத்தினார்கள்.
இதன் காரணமாக சுமார் 5 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. காலை 11 மணிக்கு பிறகு படிப்படியாக ரெயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன.
பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்ட்ரலுக்கு மிக தாமதமாக வந்து சேர்ந்தன. அதில் வந்த பயணிகள் மின்சார ரெயிலில் ஏறி சென்ட்ரலுக்கு வந்தனர்.