

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆட்களை கடத்துதல், அடிமைப்படுத்துதல் போன்ற குற்றங்களை தடுக்கும் வகையில் மத்திய பெண்கள் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மூலம் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
இதன்படி ஆள் கடத்துதல், பாலியல் துன்புறுத்துதல் போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு 10 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் அதே நபர்கள் திரும்ப, திரும்ப அந்த குற்றங்களை செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
இதுபோன்ற குற்றங்கள் என்ன என்பது பற்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் ஆள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொத்தடிமைகளாக வைத்திருத்தல், ஆபாச படம் எடுத்தல், உடலிலுள்ள உடல் உறுப்புகளை அகற்றுதல், கட்டாயமாக பிச்சை எடுக்க வைப்பது போன்றவை இந்த குற்றத்தில் அடங்கும்.
இதை செய்பவர்களுக்கு குறைந்த பட்சம் 7 ஆண்டிலிருந்து 10 ஆண்டு தண்டனை வழங்கப்படும். இதில் கொடூர குற்றங்களை செய்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கலாம். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இந்த சட்டத்தில் பல்வேறு குற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தப்பட்டு எடுக்கப்பட்ட படங்களை எலக்ட்ரானிக் ரீதியாகவோ, அல்லது புத்தகமாகவோ வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ அவர்களுக்கு 3 ஆண்டிலிருந்து 7 ஆண்டு தண்டனை வழங்கலாம்.
மேலும் இதுபோன்ற படங்களை வைத்து பணம் பறிப்பது, மிரட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கும் இதே தண்டனை வழங்கலாம். இதுபோல பல்வேறு அம்சங்கள் அந்த சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு உதவியையும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.