தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடை மூடல்

தூத்துக்குடியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத செல்போன் கடை மூடப்பட்டது.
கடை மூடல்
கடை மூடல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் வரும்போது, கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி என்பது காணாமல் போய்விட்டது.

ஊரடங்கு தளர்வுக்கு முன்பு கடைகளின் முன்பு வட்டங்கள் போடப்பட்டு, ஓரளவுக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான கடைகளின் முன்பு வட்டங்களை காணவில்லை. கடைகளின் முன்பு சிலர் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்றாலும், பின்னர் வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை மறந்து, முந்திச்சென்று பொருட்களை வாங்குவதையே குறிக்கோளாக கொள்வதால், வரிசை நிலைகுலைந்து விடுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கடைகளில் விதிமீறல்களில் ஈடுபடுகிறவர்களை கடை உரிமையாளர்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ச்சியாக கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின்போது சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், கை கழுவும் திரவம் வைக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தூத்துக்குடியில் உள்ள ஒரு செல்போன் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், வாடிக்கையாளர்கள் நெருக்கமாக நின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த செல்போன் கடையை மூடினர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com