குருகிராமம் மாணவன் கொலை: சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது சிபிஎஸ்இ

குருகிராமம் மாணவன் கொலை: சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது சிபிஎஸ்இ

குருகிராமம் ரியான் பள்ளியில் 7 வயது மாணவன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஎஸ்இ, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Published on

புதுடெல்லி:

அரியானா மாநிலம் குருகிராமத்தில் ரியான் சர்வதேச பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவனான பிரத்யுமன் தாகூர் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி கழிவறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தான். மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் கீழ் இயங்கும் இந்த பள்ளியில் நடந்த கொடூர கொலை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர்கள் போரட்டத்தினால் கடும் நெருக்கடியை சந்தித்த அரியானா மாநில அரசு இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தது.

இதையடுத்து வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், இந்த கொலை வழக்கு குறித்த பிரமாணப்பத்திரத்தை சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த பிரமாணப்பத்திரத்தில் ரியான் சர்வதேச பள்ளி பல்வேறு விதிமீறல்களை அரங்கேற்றியிருப்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் போதிய அளவில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பலவும் இயங்காத நிலையில் உள்ளது. பள்ளி பணியாளர்களுக்கென தனியாக கழிவறை வசதி இல்லை. அதுமட்டுமில்லாமல், ஒருசில எலக்ட்ரிக்கல் பேனல்கள் மூடப்படாமல் உள்ளது. இது பள்ளி மாணவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஆக அமைந்துள்ளது, என பிரமாணப்பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த செப்டம்பர் 16-ம் தேதி ரியான் சர்வதேச பள்ளிக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உங்கள் பள்ளிக்கான அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com